திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்கவும், தொற்றுப் பரவாமல் தடுக்கும்பொருட்டு முழுக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்குவதற்கு வியாபாரிகளுடன் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் ஊராட்சி வாரியாக மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு பழவேற்காடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சேவை மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.
அதனடிப்படையில், ஒரேநாளில் 40-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இரவு பகலாக சமூக இடைவெளியோடு மளிகைப் பொருள்களை பாக்கெட் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
ரூ. 250, 500-க்கு சரியான எடையில் பாக்கெட் செய்யப்பட்டு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வாகனங்களில் ஏற்றி முதற்கட்டமாக மீனவ மக்கள் வசிக்கும் பசியாவரம், எடமணி, ரஹ்மந்த் நகர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களிடையே நேரடியாக விற்பனைசெய்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "இந்தப் பணியினை நாங்கள் சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம். சொந்த கடைகளை விட்டுவிட்டு வாகனங்களில் வீதி வீதியாக விற்பனை செய்வது கடினமான உள்ளது.
இதனால், வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர லாபம் குறைவுதான். இருப்பினும் இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களுக்கு உதவிசெய்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கறி விருந்து வைத்த 'டிக் டாக் புள்ளிங்கோக்கள்' - பிணையில் விடுவிப்பு