திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட காரனோடை, சோத்து பெரும்பேடு, செருக்கஞ்சேரி, பெரிய நெற்குன்றம், சின்ன நெற்குன்றம், அட்ட பாளையம், புதுக்குப்பம், ஜெயராம்புரம், கண்ணியம் பாளையம், ஞாயிறு ஆகிய பகுதிகள் வழியாகத் தடம் எண் 56J என்ற பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டுவந்தது.
அந்த பேருந்து ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வருவதால் கிராமங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால் அப்பகுதியில் கூடுதலாகப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
அடிப்படை வசதி, குடியிருக்க நிரந்தர வசிப்பிடம் இன்றி அவதிப்பட்டு வரும் அருந்ததியர், ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 9 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட புரட்சி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதாக அலுவலர்கள் உறுதியளித்த பின் அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் கோயம்பேடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:வேர்க்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல்