திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நூறு நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப்புறங்களில் விவசாயம் அழிந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டம் கிடைத்தால் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஓரளவு பயன் பெற முடியும். எனவே ரங்கராஜன் கமிஷன் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் குறைந்தப்பட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கின் மூலம் அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் கரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களின் ஒரு நாள் ஊதியத்தை ரூ.229 லிருந்து ரூ.256ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருவேல மரக் காடுகளின் நடுவில் வசித்துவரும் கிராம மக்கள்: உதவி செய்யுமா அரசு!