திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கரோனா வைரஸ் படத்தை சாலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் சாலையில் தேவையின்றி சுற்றித் திரிகின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஓவியர் சங்கத்தினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காமராஜர் சிலை எதிரில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை எதிரில் என மூன்று இடங்களில் 20 அடி அகலம் 30 அடி நீளத்தில கரோனா வைரஸ் படத்தை பல வண்ணங்களில் சாலைகளில் தீட்டியுள்ளனர்.
இந்த ஓவியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வைரஸ் குறித்த அச்சத்தையும் வெளியில் வரக்கூடாது என்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஓவியர் சங்க நிர்வாகி நித்தியானந்தம், "பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமலும் அச்சமும் கொள்ளாமலும் சாலையில் தேவையின்றி சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூரில் முக்கிய இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காமராஜர் சிலை சாலை சந்திப்பு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பிரமாண்டமான கரோனா வைரஸ் படத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஓவியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்றார். அச்சங்கத்தின் வட்டத் தலைவர் ஜெகன், வட்ட பொருளாளர் சின்னு, துணைத் தலைவர் எஸ். ராஜன் மற்றும் நிர்வாகிகள் ரூபன் சூரிய பிரகாஷ், ஈகை கதிர், சோலை டேவிட், சூர்யா ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து கரோனா வைரஸ் உருவப்படத்தை வரைந்தனர்.
இதையும் படிங்க: முள் செடி வெட்ட வந்தவருக்கு சரமாரி அடி