கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அரசின் எச்சரிக்கைகளை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறை கண்டித்தும், உரிய அனுமதியின்றி வெளியேவரும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையிலான காவலர்கள் மாவட்டம் முழுவதும் இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.