சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கோபி. இவரது மகன் ஜெகதீசன் (18). கல்லூரியில் படித்துவந்த இவர், விஜயதசமியை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறைக்காக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனது தாத்தா பெருமாள் வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில், தனது நண்பர்களுடன் அந்தேரி பகுதியில் நேற்று கிருஷ்ணா நதி நீர்க் கால்வாயில் இவர் குளிக்கச் சென்றபோது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், ஜெகதீசன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பின் மாயமானார். அவரது உடலை பேனலூர்பேட்டை காவல் துறையினர், திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் உதவியுடன் தேடிவந்த நிலையில், இன்று பூண்டி நீர்த்தேக்கம் அருகே ஜெகதீசனின் உடல் ஒதுங்கியது.
உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்காக தாத்தாவின் வீட்டிற்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.