பூவிருந்தவல்லி வட்டத்திற்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர், விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் எந்த தொய்வும் இருக்காது. ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அவரது பயணம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 12 துறைகளில் தாக்கம் உருவாக்கும் பயணமாகவும் இது அமையும். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை பெருமுயற்சி எடுத்துவருகிறது" என்றார்.