சென்னை: மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான வெளிவட்டச் சாலையில் இரண்டாம்கட்டமாக ரூ.1025 கோடி மதிப்பீட்டில் 30.5 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்ட 6 வழித்தட பிரதான சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
அதற்கான துணை விழா திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது. அதில் ஆட்சியர் பொன்னையா கலந்துகொண்டு கொடியசைத்து, அந்தச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார். இதில் பொன்னேரி எம்எல்ஏ சிறுனியம் பலராமன், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சாலையால் 28 கிராமங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் மக்கள் பயன்பெறுவர். எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகச் சாலையுடன் இந்த வெளிவட்டச் சாலை இணைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.