திருமுல்லைவாயில் அருகே வெங்கடாசலம் நகரில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரவு நேரங்களில் வெளியாட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சத்திலேயே இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் 'மூன்றாம் கண்' 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருமுல்லைவாயில் வெங்கடாச்சலம் நகரில் நடைபெற்றது. இதற்கு திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருஷோத்தம்மன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், ஆவடி காவல் உதவி ஆணையர் ஜான்சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை உயர் அலுவலர், "முதற்கட்டமாக 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுவருகிறது.
அம்பத்தூர் பகுதியில் மொத்தமாக 13 ஆயிரத்து 790 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக நம்முடைய மாவட்டத்தில் குற்றச் சம்பவம் 30 விழுக்காடாக குறைந்திருக்கிறது. மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்க இன்னும் நிறைய கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.