கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 845 பயனாளிகளுக்குத் திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட சுமார் 10 லட்சத்து 93 ஆயிரத்து 553 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர்.
முன்னதாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அப்பகுதியில் விதிமுறைகளை மீறி வைத்திருந்த பேனர்களை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றினார். மேலும், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 150 எக்டேர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை நிர்வாகிகளை அழைத்து உள்ளூர் கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள கருத்தடை பரிசோதனை மையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதால், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் சென்று பெண் குழந்தைகள் பிறப்பதை, கருத்தடை மூலம் தடை செய்து வருகின்றனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கருத்தடை மையங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக 1000 ஆண்களுக்கு 911 பெண்கள் என்ற பிறப்பு விகிதம், தற்போது 978 ஆக அதிகரித்துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.