திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில், கடந்த 15ஆம் தேதி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிலர் ஸ்பிரே அடித்து. வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது காவல் ரோந்து வாகனம் வருவதைக் கண்டு அவர்கள் அங்கிருந்து காரில் தப்ப முயன்றனர்.
காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றபோது. காரை நிறுத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து, காரின் பதிவு எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது ஆந்திர மாநிலத்தில் திருடி வரப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஓன்றில் 4 லட்ச ரூபாய் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முன்னதாக பணம் எடுத்தவர்களின் விவரங்களை சேகரித்தபோது, சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவர் பணம் எடுத்தது தெரியவந்தது. அந்த நபரின் புகைப்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.
அந்த நபர் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்தவர் என்பது தெரியவந்தது. கடந்த 30ஆம் தேதி ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ,ஹரியானாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆர்ஜே 14 ஜே கே என்ற பதிவு எண் கொண்ட அவரது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஏற்கெனவே தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய நபர் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலம் நுவும் மேவாத் ஜில்வாவைச் சேர்ந்த சாஜித், ஹரிசத், என்மதன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் என தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வாகனம் மற்றும் அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.