திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் கடந்த 14-ஆம் தேதி ஒரு தனியார் உணவகத்தின் அருகே தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றுவந்து பார்க்கும்போது அவரது பைக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வினோத்குமார் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த காட்சிகளில் இரண்டு பைக்கில் வரும் எட்டு சிறுவர்கள் தங்களது பைக் பழுதானது போல் நோட்டமிட்டு, பின்னர் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவர்களில் ஒரு சிறுவன், வினோத்குமாரின் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக திருத்தணி அடுத்த பெரிய கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர், மணிகண்டன் ஆகிய இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறு சிறுவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.