ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிறந்த நாளை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கொண்டாடினார். இதில் பல்வேறு இசைக் கலைஞர்களும் இசை மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் வெளிநாட்டு இசை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது ரஹ்மான் 'தஅ' என்னும் புதிய இசைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது குறித்து அவர் கூறிய போது, ' 'தஅ' திட்டம், இளைய தலைமுறையினர் இன்று அனைத்தையும் இணையதளத்திலும் சமூக வலைதளத்திலும் பார்த்து கற்றுக்கொள்கின்றனர். எனவே உலகத்தில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களில் இருந்து அவர்களை மீட்டு விஞ்ஞானிகள் ஆகவும் இசையமைப்பாளர்கள் ஆகவும் தலைசிறந்த மனிதர்களாகவும் மாற்ற இந்த முயற்சி பெரிதும் உதவும்.
'தஅ' என்பதற்கு அர்த்தம் தகதிமிதா, தாரா, தாய், தந்தை, தமிழ், தாளம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த 'தஅ' இசை எதிர்காலத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பழமையை விரும்புகிறோம். இதை அடுத்த தலைமுறை உணரும் விதமாகக் கொண்டு செல்வதே இதன் நோக்கம். இந்த இசைத் திட்டம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் " என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டாதரணி, பரத் பாலா, ஜெயராமன், அமெரிக்காவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் டாட் மேக்ஓவர் ,சீன வயலின் கலைஞர் ஜூலியா, ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.