திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு ராஜீவ் காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.
இக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, “மத்திய பாஜக அரசு, நாட்டை பிளவுபடுத்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதை மறைக்க, மக்கள் விரோத திட்டங்களை அறிவித்து, மக்களை சிந்திக்க விடாமல் பரபரப்பாக வைத்துள்ளது. உதாரணமாக தொழில் நகரமாக இருந்த கோவை, திருப்பூர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மேலும், தொழிற்சாலை நகரம் என்று கூறப்படும் திருப்பூர், தொழில் வளர்ச்சியில் வரலாறு காணாத அளவு பின் தங்கியுள்ளது. தற்போது ஒரு மதத்தினரை பழிவாங்கும் நடவடிக்கையாக தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றி, அதை நடைமுறைப்படுத்த விரித்து வருகிறது. தமிழக அரசும், மத்திய பாஜக அரசின் அடிமைபோல் அவர்களுக்கு ஏற்றவாறு இங்கு ஆட்சி நடத்துகிறது” என்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என பாஜக தலைவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர், என்பது குறித்து கேட்டபோது, “இந்த சட்டம் அனைவரையும் கடுமையாக பாதிக்கக்கூடிய சட்டம். இன்று இஸ்லாமியர்களை வெளியே போகச் சொல்லும் சட்டம், நாளை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இந்தி பேசுபவர்களை தவிர அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சொல்லும் காலமும் வரலாம்” என்றார்.
இதையும் படிங்க: ’சசிகலாவால் அரசியல் மாற்றம் நடக்கும்’ - சுப்பிரமணியன் சுவாமி