திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருத்தணி மலை. முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக விளங்குகிறது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இத்தலம் முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்துகொண்ட சிறப்புமிக்க தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடித் தெப்பத்திருவிழா ஆகிய சிறப்பு திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
இன்று முதல் தரிசனம்
கரோனா பரவல் காரணமாக அனைத்துக் கோயில்களையும் மூடக்கோரி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டருந்த நிலையில், கடந்த ஐந்து நாள்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் (ஆக. 05) மீண்டும் திருத்தணி மலைக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் சிறப்புபெற்ற ஆடிக்கிருத்திகை வாரத்தையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகளைத் தொடர்ந்து, பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
மகிழ்ச்சியில் பக்தர்கள்
ஆடிக்கிருத்திகை விழாவின்போது முருகப்பெருமானை தரிசிக்க அனுமதி கிடைக்காத நிலையில், இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், சுவாமி தரிசனத்தில் கலந்துகொண்டு ஆர்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இருப்பினும், திருக்கோயில் மீண்டும் திறப்பு தொடர்பாக பக்தர்களுக்கு முழுமையான அறிவிப்பு இல்லாததால், குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவருகிறார்கள்.
மலைக்கோயிலுக்கு குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே வருகை தருவதால் வெகுசீக்கிரமாக முருகப்பெருமானை தரிசித்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!'