திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்தின் கோசாலை மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் மையம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வைத்து உரையாற்றுகையில், சுவாமி விவேகானந்தர் குறித்து கிராம மக்களிடையே எடுத்துக் கூறி, அவரது பொன்மொழிகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார் தொடர்ந்து பொங்கல் திருநாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து விவேக் கூறும்போது, "ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டு வைத்தேன். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அறிவுறுத்தலின் பேரில் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன். ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்துள்ளேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தேவி, மெய்யூர் ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தொடர் மழை: 4 ஓட்டு வீடுகள் சேதம்