சென்னை பி.பி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவர் கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். அவருடைய ஒரே மகன் கார்த்திக் (13) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, கோடை காலம் என்பதால் விடுமுறையை கழிக்க பாடியநல்லூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை கரிக்கோல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கார்த்திக் சென்றார்.
இந்நிலையில், இருவரும் பாடியநல்லூர் மீன் மார்க்கெட் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக்கின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கரிக்கோல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் அதிகாரி சக்திவேல், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
மேலும், இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தனது ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த பெற்றோரின் நிலையைக் கண்டு உறவினர்கள் கண்ணீர் வடித்த நிகழ்வு காண்போரின் மனதை கலங்கவைக்கிறது.