திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(32). இவரது மனைவி மஞ்சு(28). இவர்களுக்கு துரையரசன்(5), தினேஷ்(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கொள்ளுமேட்டில் புதிதாக வீடுகட்டி வருவதால், தற்காலிகமாக அருகே குடிசை அமைத்து அதில் குடும்பத்துடன் பச்சையப்பன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியார் பள்ளியில் UKG படிக்கும் துரையரசனை பள்ளியில் இருந்து அழைத்து வர நேற்று மாலை மஞ்சு சென்றார். அப்போது, 3 வயது குழந்தை தினேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால், வீட்டை தாழிட்டு சென்றுள்ளார். மஞ்சு சென்ற சிறிது நேரத்தில் குடிசை வீட்டின் மேலே செல்லும் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி குடிசை மீது விழுந்தது.
இதையடுத்து, குடிசை வீட்டில் மளமளவென தீப்பற்றியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. திடீரென வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்ததால், வீடு முழுவதும் சேதமடைந்ததுடன், 3 வயது குழந்தையும் உடல் கருகி உயிரிழந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். மேலும், சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 வயது சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.