திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடை நுழைவாயிலில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தவர், குவார்பாளையம் அடுத்த குமார நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிரத்தினம் (55) என்பது தெரியவந்தது.
பின்னர், இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இறந்தவர், மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.