திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, பொன்னேரி அடுத்த பிரளயம் பாக்கம் பகுதியில் ஆற்றின் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர் அருகில் இருந்த விளைநிலங்களில் பாய்ந்ததால் தத்தமஞ்சி, ஆண்டார்மடம், பெரும்பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
மேலும், வெள்ள நீர் சூழ்ந்ததால் தண்ணீர் வீடுகளுக்குள் பயந்தது. இதனால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகினர். பலர் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளுடன் ஊரைவிட்டு வெளியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் உழவு இயந்திரத்தின் உதவியோடு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆரணி ஆற்றின் கரை பலவீனமாக இருப்பது குறித்து ஏற்கெனவே பொதுப்பணித்துறை அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.