திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்தப் புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் 200க்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் வேலை செய்வதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், நேற்று மாலை திடீரென புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 109 ஆண்கள், 88 பெண்கள், 32 சிறுவர்கள், 18 சிறுமிகள் என, 247 பேர் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. இதன்பின்பு, அவர்கள் மீட்கப்பட்டு ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் சி. வித்யா, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முருகநாதன், தனி வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர்கள் யுகேந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட வருவாயத்துறை அலுவலர்கள் மீட்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் காயம்!