திருவள்ளூர்: வேப்பம்பட்டு விநாயகபுரத்தில் வசித்து வருபவர் முரளிதரன் (53). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரணேஷ் (16), திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார்.
இவர் நேற்று (ஆக.28) மாலை தனது நண்பர் வேல்சரவணனுடன் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் தொட்டிக்கலை என்ற இடத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், நீச்சல் தெரியாததாலும் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
மாணவன் உடல் மீட்பு
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் லேல்சரவணன் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார்.
அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் பிரணேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படை வீரர்கள் பிரணேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 24 மணிநேரத்திற்குப் பிறகு பிரணேஷின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆற்று மணல் கொள்ளை - கண்டுகொள்ளாத வருவாய்த்துறை