திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவலர்கள் இன்று(பிப்ரவரி 14) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது, கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை ரோந்து காவலர்கள் அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தப்பியோடினர். பின்னர், வாகனத்தை சோதனையிட்ட காவலர்கள், தர்பூசணி பழங்களுக்கு அடியில் செம்மரக்கட்டைகளை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1 டன் செம்மரக்கட்டைகளை வாகனத்துடன் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகள் பறிமுதல்!