திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலகிருஷ்ணன். இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். பாலகிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும்போது திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார். இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்ட நிலையில், இருவரும் நேரில் சந்திப்பது தடைபட்டுள்ளது. இதனால், திருநெல்வேலியில் உள்ள காதலியின் வீட்டிற்கு பாலகிருஷ்ணன் சென்றபோது, அங்கு மாணவியின் பெற்றோர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், மாணவி தற்போது வேறு ஒரு இளைஞரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பாலகிருஷ்ணன் தனது காதலியை பார்க்க நேற்று (பிப்.23) திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அப்போது, மாணவி பேருந்தில் செல்வதைக் கண்ட பாலகிருஷ்ணன் கல்லூரிக்கு சென்று, தனது காதலியை சந்தித்து பேச முற்பட்டுள்ளார். ஆனால், மாணவி பாலகிருஷ்ணனிடம் பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது கையில் வைத்திருந்த பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில், வலி தாங்க முடியாத மாணவி அலறியபடி துடித்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இதனிடையே, கல்லூரி வளாகத்தினுள் இருந்தவர்கள் பாலகிருஷ்ணனை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : காவல் துறை விசாரணை!