திருநெல்வேலி: நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சி பகுதியைச்சேர்ந்தவர், நவீன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாங்குநேரி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவீன் கைது செய்யப்பட்டதாக அப்போது இருந்த காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவீன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் தனிப்பிரிவு காவலர் ஒருவருக்கு நவீன் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது.
அதாவது மறுகால்குறிச்சி பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, சிலர் கையில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து நடனமாடியுள்ளனர். இதைக்கவனித்த உதவி ஆய்வாளர் ஒருவர் அவர்களை தடுத்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நவீன் மற்றும் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்ட முயன்றனர். இது தொடர்பாக நவீன் மற்றும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால், இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இது போன்ற குற்றவாளிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும்படி எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நவீனை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும் என நாங்குநேரி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சுந்தர் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த நவீன், காவலர் சுந்தரை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக நவீன் பேசும் ஆடியோவில், “வரும் 18ஆம் தேதி உன்னை கொலை செய்து விடுவோம் நாங்கள் இரண்டு சாதியினரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். நீ பட்டியலின சாதி” என்று நவீன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்த ஆடியோ விகாரம் எஸ்.பி. சரவணன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து எஸ்.பி.யின் அதிரடி உத்தரவின் பேரில் காவல் துறையினர், நவீனை சுற்றி வளைக்க நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிரமாகத் தேடினர். இதனையறிந்து நவீன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதாவது தனிப்பிரிவு காவலரின் வேலை என்பது சீருடை அணியாமல், மக்களோடு மக்களாக பழகி குற்றச்சம்பவங்கள் நடைபெற இருப்பதை முன்கூட்டியே தெரிந்து, அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
எனவே, சுந்தரும் தனது பகுதிக்குட்பட்ட ஏரியாவில் உளவுப்பணி மூலம் குற்றச்சம்பவங்களை திரட்டி வந்துள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே நவீன், காவலர் சுந்தரை மிரட்டியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து பெண் உள்பட 2 பேர் வெட்டிப்படுகொலை... தூத்துக்குடியில் பயங்கரம்