தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
வரலாற்று பொக்கிஷங்கள் புதைந்துக் கிடக்கும் நெல்லை மண், பல்வேறு எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் இந்த உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் நெல்லையைப் பூர்வீகமாக கொண்டவர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, தெற்கு பஜார் பகுதியில் வசித்து வந்த தொ.பரமசிவனின் தந்தை பெயர் தொப்பா தாஸ், தாயார் பெயர் லட்சுமி. திராவிட கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவர் எழுதிய நூல்கள் தமிழ்வெளிப் பரப்பில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் ஆகியவை இவரது எழுத்தில் வெளிவந்து தமிழ்ச் சமூகத்தை சலனத்திற்குட்படுத்திய முக்கிய நூல்களாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொ.பரமசிவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர் நூல்கள் எதுவும் எழுதாமல் எழுத்து உலகை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் இன்று(டிச.24) தொ.பரமசிவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி தொ.பரமசிவன் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அவரது இல்லத்திற்கு தற்போது கொண்டுவரப்பட்டது. பிரபல பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் உயிரிழந்த சம்பவம் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'எனது பணி எழுதுவதே, பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய போராடுவதல்ல' - அருந்ததி ராய்