திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த செட்டிகுளம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி கல்யாணி ஜோசப். இந்தத் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் கல்யாணிபுரத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களது உறவினர்கள் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் கல்யாணியின் வீட்டருகில் குடியிருந்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக பேச்சுவார்த்தையில்லை.
இந்நிலையில் தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கல்யாணி மற்றும் இசக்கியம்மாள் ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இருவருக்குமிடயே ஏற்பட்ட சண்டையை சமரசம் செய்ய கருப்பசாமி முயற்சித்துள்ளார். சமரசம் செய்ய மறுத்த கல்யாணி இவரைக் கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி மாலையில் மது அருந்திவிட்டு கல்யாணியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கல்யாணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் தப்பியோடிய கருப்பசாமியின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.