திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், அச்சம்பட்டியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது தாய் வழி சொத்து தற்போது விற்பனை செய்யப்பட உள்ளதாக அப்பெண்ணுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அதில், தனக்கும் பங்கு தர வேண்டும் என தனது சகோதரர்கள் மற்றும் சகோதரியிடம் தெரிவித்து உள்ளார். ஆனால், ‘மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் உனக்கு சொத்தில் பங்கு தர முடியாது’ என உடன் பிறந்தவர்கள் மறுத்து உள்ளதாகத் தெரிகிறது.
இதனை அடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெண், சொத்தில் உடன் பிறந்தவர்கள் தனக்கு பங்கு தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளார்.
முன்னதாக, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும், இதுவரை புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். இருப்பினும், சொத்தில் எவ்வித பங்கையும் தர பெண்ணின் உடன் பிறந்தவர்கள் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மனு நீதி நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெண், குறைதீர்க்கும் கூட்ட அலுவலகம் முன்பாக தற்கொலை செய்ய முயன்று உள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பிற்கு நின்ற காவல் துறையினர் உடனடியாக பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுத்து உள்ளனர்.
பின்னர், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைவைக்கப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அப்பெண் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் CISF பயிற்சி நிறைவு விழா: உறுதிமொழி ஏற்பு, அணிவகுப்பை கண்டு ரசித்த பெற்றோர்!