மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பெருங்கோட்டூராகும். விவேக்கின் தந்தை பள்ளிக்கல்வித் துறையில் அலுவலராகப் பணிபுரிந்தவர். அவரது பணி மாறுதல் காரணமாக விவேக்கின் குடும்பம் அடிக்கடி வேறு வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தவகையில், நடிகர் விவேக்கின் பள்ளிப்பருவ காலத்தில் அவரது குடும்பம் திருநெல்வேலி மாவட்டம் நெல்லை முருகன்குறிச்சி பகுதியில் குடியிருந்தது. முருகன்குறிச்சியில் விவேக்கின் தாத்தா வசித்து வந்துள்ளார்.
எனவே தனது தாய் தந்தையுடன், தாத்தா வீட்டில் சில வருடங்கள் விவேக் வசித்துள்ளார். அப்போது, முருகன்குறிச்சியில் உள்ள கதீட்ரல் பள்ளியில் விவேக் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் மீண்டும் பணி மாறுதல் காரணமாக விவேக்கின் குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்தது. மீதமுள்ள பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த விவேக், அங்ககுள்ள அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரி படிப்பை பயின்றார். பின்னர் தலைமைச் செயலக பணிக்காக சென்னைக்கு சென்ற அவர் திரைத்துறையில் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் நடிக்கச் சென்றார்.
திரைத்துறையில் காமெடி நாயகனாக தனக்கென தனி முத்திரை பதித்து கொண்ட விவேக், பெயரும் புகழும் பெற்றார். இந்த அளவுக்கு பெரிய ஆளாக வாழ்க்கையில் முன்னேறிய பிறகும் கூட தான் வளர்ந்த ஊரை எப்போதும் அவர் மறந்ததில்லை என்று திநெல்வேலி மக்கள் தெரிவிக்கின்றனர். அதாவது நெல்லை முருகன்குறிச்சியில் நடிகர் விவேக் குடும்பத்தினர் வாழ்ந்த வீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பே விற்று விட்டனர். இருப்பினும் தற்போது அவரது மறைவை கேட்டு பிறகு விவேக் வாழ்ந்த வீடு என்று அறிந்தவுடன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர் வாழ்ந்த வீட்டை பார்த்து சென்றனர்.
இதுகுறித்து முருகன்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் நம்மிடம் கூறுகையில், "நடிகர் விவேக் குடும்பம் சில ஆண்டுகள் இங்கு வசித்து வந்தார்கள். இங்குள்ள கதீட்ரல் பள்ளியில் தான் விவேக் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தேன். எனக்கு அவரை நன்றாக தெரியும். பின்னர் சென்னைக்குச் சென்று சினிமாவில் நடித்தார். அவர் பெரிய ஆளாக முன்னேறினாலும் கூட தான் வளர்ந்து ஊரை மறந்ததில்லை.
இந்த பகுதியில் சினிமா படப்பிடிப்புக்கு எப்போது வந்தாலும் எங்களை காண வருவார். அப்போது, அவர் எங்களிடம் நான் உங்களில் ஒருவன் என்று அன்பாக பேசுவார். திடீரென அவரது உயிரிழந்ததைக் கேள்விப்பட்டு நாங்கள் பெரிதும் கவலைப்பட்டோம். வளர்ந்த மண்ணுக்கு அவர் பெருமை தேடி தந்துள்ளார்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல்