திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காவல்துறை, காவலர்களிடையே மன அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தற்கொலை சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.
அண்மையில் புதிதாகப் பொறுப்பேற்ற டிஜிபி சைலேந்திரபாபு காவலர்கள் வாரம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். இருப்பினும் பல்வேறு காவல் நிலையங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
காவலர் மன அழுத்தம்
இந்த சூழ்நிலையில் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாசலம் என்பவர், காவல் துறையில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, தான் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக உருக்கமாக ஆடியோ ஒன்றில் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், "நான் சிறுவயதிலிருந்தே காவல் பணியை மட்டும் நேசித்து வந்ததால், வேறு எந்த பணிக்கும் செல்ல விரும்பாமல் 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலரானேன். இதையடுத்து 2011ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகவும் தேர்ச்சி பெற்றேன். நான் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் மரியாதை மதிப்பும் பெற்றவன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது ஓய்வு நேரம் மிகக் குறைவாக இருந்தபோதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்தேன். எனது உடல் பலவீனம், கவலைகள் மறந்தேன். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன்.
குற்றங்கள் கண்டுபிடிப்பது மிக மிக எளிது
காவல்துறையில் குற்றங்களை கண்டுபிடிப்பது மிக மிக எளிது. ஆனால் சரி செய்வது கடினமான செயல். அதுவும் பாளையங்கோட்டை போன்ற காவல் நிலையங்களில் ஒரு காவலரை தண்டிப்பதற்கு உயர் அலுவலர்களுக்கு நிறைய வழிகள் உள்ளன. இந்த பதிவால் எனக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே பதிவிடுகிறேன்.
எனக்கு 45 வயது. இருப்பினும் உடல்நலம் நன்றாகவே உள்ளது. ஆனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. எனது இதயம் துடிக்க மறந்து விட்டால் என் குடும்ப உறவுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். இருப்பினும் எனது மனக்கவலை வெளிக்காட்டி தண்டனை பெற்றாலும் தவறில்லை என்று நினைக்கவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் விடுப்பு எடுக்காமல் வேலை செய்து வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை
கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட 5 மணி நேரம் உறங்கியது இல்லை. எனது அன்பு மகள் உறங்கியபின் வீட்டுக்கு வருவதும் காலையில் விழிக்கும் முன் வேலைக்கு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை. அப்படி உழைத்தும் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை உணருகிறேன். இந்த ஆடியோவால் எனது பணி தொடருமா என்பது கேள்விக்குறியே" எனப் பேசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவல் துறையின் அதிரடி நடவடிக்கை - கொத்தாக கைதான ரவுடிகள்