திருநெல்வேலி: தமிழர் தந்தை என அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 42வது நினைவு தினம் இன்று (மே 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். மேலும், இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் சி.பா.ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு மதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம். சிங்கப்பூர் சென்று வழக்கறிஞருக்கு படித்து விட்டு லண்டனில் படித்தபோது பத்திரிகை நிரூபராக மாறி, அதன் பிறகு பெரும் பொருள் ஈட்டி வழக்கறிஞராக தமிழ்நாட்டுக்கு வந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
தமிழனுக்காக பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக மாலை முரசு நாளிதழைத் தொடங்கினார். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகையைத் தொடங்கினார். தற்போது பங்களா முதல் குடிசைவாசி வரையிலும் தினத்தந்தியைப் படிக்கின்றனர்.
காலை எழுந்த உடன் தந்தி, அதன் பின்னரே காபி என்ற நிலைமையைக் கொண்டு வந்து பத்திரிகை புரட்சியை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை மக்கள் மனதில் பதிய வைத்தவர். ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்துதான் சட்டப்பேரவையைத் தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர், தமிழர் தந்தை சிபா ஆதித்தனார்.
தமிழ் ஈழம் வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர், அவர். அவரது புகழ் என்றும் நீடித்து நிலைக்கும். வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. வெற்றியோடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு திரும்புவார்.
மதுவிலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். தற்போது திமுக அரசு 500 மதுக் கடைகளை மூட முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடியது. நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (மே 23) முதல் வருகிற 31ஆம் தேதி வரை அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: MK Stalin Singapore Visit: சிங்கப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின்.. யார் யாருடன் சந்திப்பு.. முழு விபரம்!