திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இன்று (மே.5) பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே தேர்வு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் நெல்லை சேரன்மகாதேவி வள்ளியூர் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் தேர்வு நடத்தும் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் நேற்று (மே.4) கொண்டு வரப்பட்டது.
தேர்வு நடைபெறும் அறைகள் மற்றும் வளாகங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், தேர்வு நடைபெறும் இடம் கட்டுப்பாட்டுப் பகுதி என அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, தடையற்ற மின் விநியோகம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கி முடியும் வரை காவல்துறையும் தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தேர்வு பொறுப்பு அலுவலராக அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 9 ஆயிரத்து 678 மாணவர்களும் 11 ஆயிரத்து 667 மாணவிகளும் மொத்தம் 21,345 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 181 பள்ளிகளில் எழுபத்தி மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன 10 மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் அமைதியாகத் தேர்வு நடத்தக் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 361 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 7 பேர் பாளை மத்திய சிறை வாசிகள் ஆவர் தனி தேர்வுகளுக்காகப் பாலி மத்திய சிறை உள்ளிட்ட 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மே மாதம் தேர்வு மாதமாக மாறியுள்ளது இன்று (மே.5) பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் நாளை (மே.6) பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு பத்தாம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் உள்ள மாணவர்களுக்கான இருக்கைகளில் அவர்களது பதிவு எண் ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையில் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என மூன்று விதமான பதிவு எண்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளன. அனைத்து தேர்வுகளும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.