திருநெல்வேலி: களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் புலி, மான், யானை, காட்டெருமை, செந்நாய், மிளா உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பக பகுதியில் ஆண்டு தோறும் அனைத்து வகை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். 4 ஆண்டுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்படும்.
வருடாந்திர கணக்கெடுக்கும் பணி நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இந்த பணியில் வனத்துறைப் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இதையடுத்து கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கான பயிற்சி முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பயிற்சியில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 120 பேர் கலந்துகொண்டனர். பயிற்சியைத் தொடர்ந்து 4 வனச்சரகத்திற்கு உட்பட்ட 31 பீட் பகுதியில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
பிப்ரவரி 16ஆம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பில் சேகரிக்கும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு வன உயிரிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். மேலும் கைப்பேசியின் ஜிபிஎஸ் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலி மூலம் வனவிலங்குகள் கணக்கிடப்படுகிறது.
நேற்றைய கணக்கெடுப்பின் போது பாபநாசம் அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு அமைக்கப்பட்ட தொட்டி அருகே புலியின் கால் தடம் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 8 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடப்பதால் புலிகள் காப்பக பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: பில் கலெக்டர், கிளார்க் பணியிடை நீக்கம்: நெல்லை மாநகராட்சி ஆணையர் அதிரடி!