திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்துள்ள கீழ வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி பாக்கியலெட்சமி சுய உதவிக்குழுவின் மூலம் தூய்மைப் பணியாளராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி, நுண் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாக்கியலெட்சுமியின் கை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது.
இதில் அவரது கைகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் பாக்கியலெட்சுமி, மக்கும் குப்பைகளை பிரித்துப்போடும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.
பாக்கியலெட்சமியின் வலது கை சிதைந்தது பற்றிய விவரம் கவனத்திற்கு தெரியவந்தவுடன், இவருக்கு தீவிர உயர் சிகிச்சை அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டேன். பாக்கியலெட்சுமி ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும். மேலும் இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!