திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறை மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அதன்படி ரோந்து பணியை அதிகரித்தல், தவறு செய்யும் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார்.
அதேபோல் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் மற்றும் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் ஆகியோர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 8 காவல் நிலையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் தொடர்பு எண்களை அறிவித்துள்ளனர். மாவட்ட காவல் துறை சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள 32 காவல் நிலைய எல்லைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ரோந்து தலைமை அலுவலரின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாநகர காவல் துறை சார்பில், மாநகர காவல் நிலையத்தில் உள்ள 8 காவல் நிலையங்களில் ரோந்து பணியாற்றும் காவலர்கள் மற்றும் தலைமை ரோந்து அலுவலரான உதவி ஆணையர் ஆகியோரின் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் பிறருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த மொபைல் எண்கள் பயனுள்ளதாக அமையும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு லேப்டாப் வழங்குவதாக மோசடி: விழிப்புடன் இருக்க டிஎஸ்பி அறிவுறுத்தல்...!