திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறை, மாவட்ட காவல் துறை இணைந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
குறிப்பாக இளைஞர்கள் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இரண்டு லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.88 லட்சம் மதிப்புள்ள 6 டன் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதில் நான்கு நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நாளே, முன்னீர்பள்ளம் என்ற பகுதியில் காரில் கொண்டுசெல்லப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டு நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
போதைப்பொருளுக்கு எதிராக இதுபோன்ற தொடர் துரித நடவடிக்கையில் காவல் துறை ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது போதைப்பொருள்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள்கள் வைத்திருப்பது, பயன்படுத்துவது தொடர்பாகப் புகார், ரகசிய தகவல் அளிக்க 7449100100 என்ற வாட்ஸ்அப் எண் திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 24 மணி நேரமும் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை!