திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளது மத்திய சிறைச்சாலை தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மிகவும் முக்கியமானதாகும். இங்கு, விசாரணைக் கைதிகள், தண்டணைக் கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைச்சாலையில், தடை செய்யப்பட்ட பொருட்களான செல்ஃபோன், சிம்கார்டு, புகையிலைப் பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என அவ்வப்போது காவலர்கள் திடீரென சோதனை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், சிறைச்சாலையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.
தகவலைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் திருநெல்வேலி மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் காலை 6 மணி முதல் அதிரடி சேதனை மேற்கொண்டனர். இதில் சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளின் அறைகள், உணவு தயாரிப்புக் கூடம் , சேமிப்புக் கிடங்கு, சிறைச்சாலையின் உள்பகுதி மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நடந்தது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் இல்லை என்று சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையால் சிறைவளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க
ஆற்றில் மணல் அள்ள வந்த அலுவலர்கள் - சிறைப்பிடித்த பொதுமக்கள்