திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ். இவர் நேற்று முன் தினம் காலை (நவ.26) அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் உட்பட 7 பேர் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது, சிலுவை தஸ் நேவிஸ் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்தார்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக சக மீனவர்கள் சிலுவை தஸ் நேவிஸை அங்கு தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்பு கரைக்கு திரும்பிய மீனவர்கள், இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக தேடிய நிலையில், மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கியவாறு சிலுவை தஸ் நேவிஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைபற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு வழக்கு: 6 மாதத்தில் விசாரணை முடியும் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்