திருநெல்வேலி: 2022 - 2023ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களின் வருமானம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஆயிரத்து 85 கோடி ரூபாய் உடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 523 கோடியுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும், 283 கோடியுடன் கோவை சந்திப்பு ரயில் நிலையம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை, 190.7 கோடியுடன் மதுரை சந்திப்பு ரயில் நிலையம் ஆறாவது இடத்தையும், 111.7 கோடியுடன் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் 12வது இடத்தையும் பிடித்துள்ளன.
500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இருந்தால் என்எஸ்ஜி - 1 எனவும், 100 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால் என்எஸ்ஜி - 2 எனவும், 20 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால் என்எஸ்ஜி - 3 எனவும் ரயில் நிலையங்கள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், நெல்லை ரயில் நிலையம் 100 கோடிக்குள்ளாகவே வருமானம் தந்து கொண்டிருந்ததால், என்எஸ்ஜி - 3 பிரிவிலேயே இருந்தது.
ஆனால், 2022 - 2023ஆம் நிதியாண்டில் முதல் முறையாக 111.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதால், என்எஸ்ஜி - 2 அந்தஸ்தை பெறுவதற்கு நெல்லை ரயில் நிலையம் தகுதி பெற்றுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி - 3இல் இருந்து என்எஸ்ஜி - 2 ரயில் நிலையமாக மாறும்போது பல்வேறு புதிய வசதிகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும். அவை,
- பயணிகள் ஓய்வு அறை 125 சதுர மீட்டரில் இருந்து 250 சதுர மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
- நடைமேடை இருக்கைகள் 125இல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
- நடைமேடை மேற்கூரை நீளம் 400 சதுர மீட்டரில் இருந்து 500 சதுர மீட்டராக அதிகரிக்கப்படும்.
- சிறுநீர் கழிவறை மற்றும் கழிவறை 10இல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும்.
- குளிர் தண்ணீர் இயந்திரம் ஒரு நடைமேடைக்கு இரண்டு வீதம் வைக்கப்படும்.
- இணைய கணிணி மையம் அமைக்கப்படும்.
- உயர்தர உணவு பிளாசா அமைக்கப்படும்.
- ப்ரீபெய்டு டாக்சி வசதி ஏற்படுத்தப்படும்.
- இரண்டாவது நுழைவு வாயில் அமைக்கப்படும்.
- குளிர்சாதன வசதியுடன் விஐபி ஓய்வு அறை அமைக்கப்படும்.
இது போன்ற ஏராளமான வசதிகளைப் பெற முடியும் என்பதால், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் தரத்தை என்எஸ்ஜி - 3இல் இருந்து என்எஸ்ஜி - 2 ஆக மாற்ற வேண்டும் என ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.