திருநெல்வேலி: முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(48). இவரது மகன் செல்வசூர்யா (17) இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி செல்வசூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, செல்வசூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக 2 மாணவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மோதலில் ஈடுபட்டனர். இதில் செல்வசூர்யா கல்லால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற செல்வசூர்யா தலைவலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில், அவர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (ஏப். 29) உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பாகுடி போலீசார் மூன்று பிளஸ் 1 மாணவர்கள் மீது 294(b), 324, 506(2) என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மிக அலட்சியமாக செயல்பட்டதால், இந்த சம்பவம் நிகழ்ந்தள்ளதாகவும், மாணவர் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!