திருநெல்வேலி: நமது நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் பணியில் இருக்கும் சில மாவட்ட ஆட்சியர்கள், திரைப்படங்களில் காண்பதைப் போல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'தமிழ்செல்வன்' என்கிற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஒப்பான நிகழ்வு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது.
அந்த படத்தின் காட்சியில், நடிகர் விஜயகாந்த் தான் ஆட்சியராக பணிபுரிய இருக்கும் அலுவலகத்திற்கு, பொறுப்பேற்பதற்கு முன் ஒரு சாதாரண மனிதனாகச் சென்று, அலுவலகத்தின் நடவடிக்கைகளைப் பார்வையிடுவார். அப்போது மூதாட்டி ஒருவர் ஓய்வூதியத்திற்காக அவரிடம் லஞ்சம் வாங்குவதையும், அவர் அலைக்கழிக்கப்படுவதையும் கவனிப்பார்.
பின்னர் அடுத்த நாள், ஆட்சியராகப் பொறுப்பேற்ற உடன், மிகுந்த ஏக்கத்தோடு அந்த மூதாட்டியை அழைத்து வரும்படி உத்தரவிடுவார். ஆட்சியரின் உத்தரவு என்பதால் ஒட்டுமொத்த ஊழியர்களும் அந்த மூதாட்டியைத் தேடி அலைவார்கள். அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ந்துள்ளது.
அதாவது நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த செய்யது மீராள் பீவி என்ற மூதாட்டி, வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்து, தனக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்றும், தன்னை அவரது உறவினர்கள் சிலர் அடித்துத் துன்புறுத்துவதால் தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர், மூதாட்டியின் குடும்பம் குறித்து தகவல்களைப் பெற்றுள்ளார். அதில் மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருடைய குடும்பத்தினர், அவரை கைவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து அவருடைய வீட்டு முகவரி போன்ற விவரங்களைப் பெற்றுக்கொண்டு, அவரை முதியோர் காப்பகத்தில் சேர்க்கும் படி உத்தரவிட்டார்.
ஆனால், முதியோர் இல்லத்திற்குச் செல்ல விருப்பம் தெரிவிக்காத மூதாட்டி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலிருந்த காவலர்களுக்குத் தெரியாததால் அவர்கள், மூதாட்டியைத் தடுத்து நிறுத்தாமல் விட்டுவிட்டனர்.
இதனையடுத்து மூதாட்டி காணவில்லை என அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, மூதாட்டியைத் தேடும் பணியில் காவலர் தீவிரமாக ஈடுபட்டதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் மூதாட்டியைக் கண்டுபிடித்துக் கேட்ட போது அவர் தான் காப்பதிற்குச் செல்ல விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (டிச.5) அவரது வீட்டிற்கு அதிகாரிகளை அனுப்பி விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளர் மாவட்ட ஆட்சியரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், "இது போன்ற மூதாட்டிகளை அவர்கள் குடும்பத்தினர்கள் வேண்டுமென்றே கைவிட்டு விடுகின்றனர். அவர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு, மனு அளிக்க வருகிறேன் என்ற பெயரில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
மூத்த குடிமக்கள் சட்டத்தின் படி, முதியவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, ஆட்சியர் அலுவலகத்திற்குள் இது போன்ற மனநிலையில் வரும் மூதாட்டிகளைப் பாதுகாக்கும் வகையில் தான், மனு அளிக்க வந்த மூதாட்டி செய்யது மீராள் பீவியை காப்பகத்தில் சேர்க்கும்படி கூறினேன்.
தொடர்ந்து, இன்று அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள். ஒருவேளை அவர்கள் குடும்பத்தினரே மூதாட்டியைப் பராமரிப்பதாகக் கூறினால் வீட்டிலேயே விட்டு விடுவோம். இல்லையெனில் மூதாட்டியை மீட்டு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி மூத்த குடிமக்கள் இல்லத்தில் சேர்க்கப்படுவார்.
மேலும், அவரது பராமரிப்பு செலவுக்காக குடும்பத்தினரிடம் அபராதம் வசூலிக்கப்படும். பணம் செலுத்த முடியாத அளவிற்கு அவரது குடும்பம் இருக்கும் பட்சத்தில் பராமரிப்பு தொகையை அரசே வழங்கும் என்று தெரிவித்தார். தனக்குப் பாதுகாப்பு வேண்டி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டிக்காக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!