திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக உறுப்பினர்களே பல்வேறு அதிருப்தி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய அடிப்படை பணிகளையும் முறையாகச் செய்யவில்லை என்றும், தனது அறையில் வைத்து ஒப்பந்ததாரர்களிடம் மேயர் கமிஷன் கேட்பதாகவும் கூறி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் மன்ற கூட்டத்தில் பிரச்னையை கிளப்பி வருகின்றனர்.
மேயரை மாற்ற வேண்டும் என்றும் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் பரவி வந்தது. மாநகர திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் தனக்கு வேண்டிய ஒரு உறுப்பினரை மேயராக்க திட்டம் வைத்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைமை சரவணனை மேயராக அறிவித்தது.
இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஆரம்பத்திலிருந்தே மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் மேயர் சரவணனுடன் சரியான அரசியல் உறவை கடைப்பிடிக்காமல் விலகியே இருந்தார். இதற்கிடையில் மேயர் சரவணன் திடீரென அப்துல் வகாப்புக்கு எதிர் அணியாகச் செயல்படும் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜாவுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். மாலைராஜா தற்போது திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகியாக உள்ளார்.
எனவே மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தான் தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் மேயருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், திமுக வட்டாரத்தில் பரபரப்பு பேசப்பட்டது. இதுபோன்ற நிலையில் திமுகவின் கவுன்சிலர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நேரத்தில் திடீரென சென்னை கிளம்பி சென்றனர். அவர்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து நெல்லை மேயரை மாற்ற வலியுறுத்தி முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
அதன் அடிப்படையில் சிலர் விமானங்களிலும் சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், சிலர் தங்களது சொந்த வாகனங்களிலும், சிலர் கூட்டாக மினிவேன் வாகனங்களிலும் சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரை சந்தித்து முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேயரை மாற்ற வேண்டும் என்ற கவுன்சிலர்களின் கோரிக்கையை திமுக தலைமை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது சமரசம் செய்து முறையான மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த இணைந்து செயல்பட அறிவுறுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் திமுக நிர்வாகிகள் பல பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருவதால் மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி பூதாகரமாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே மேயரை மாற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு கவுன்சிலர்கள் சென்னையை நோக்கி பயணம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முக்கிய திட்டங்கள் என்ன?