மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைவினம் சார்பில் ‘சரியான உணவினை உண்போம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக நாடு முழுதும் திருநெல்வேலி உள்பட150 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த புதிய திட்ட முகாம் தொடக்க விழா நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், “நாம் உண்ணும் உணவு சரியானதாகவும் சரிவிகிதமாகவும் செறிவூட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவு கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுதான் நமது ஆரோக்கியத்தின் அடிப்படையாக உள்ளது. அதனால் ஹோட்டல்களில் உணவு சமைக்க பயன்படும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உணவு தயார் செய்வதால் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நல்ல உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் வரும் பொதுமக்களின் நம்பிக்கையை எப்போதும் அலட்சியப்படுத்தக்கூடாது என உணவு விற்பனையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பின்னர் சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி முகாமை அவர் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க...வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!