தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை தேசிய கட்சியான பாஜக தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட கட்சிகளை விட அதி தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர்.
திருநெல்வேலியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பதன் பின்னனி என்ன?
குறிப்பாக திமுக, அதிமுக போன்ற மாநில கட்சிகளே இன்னும் தேர்தல் அலுவலகங்களை திறக்காத நிலையில், முதல்முறையாக பாஜக கட்சியினர் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான தொகுதி தேர்தல் அலுவலகம் திறந்து வருகின்றனர். அந்தவகையில், திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று (பிப்.23) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதாவது, திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அதேசமயம் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாத நிலையில் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியை கைப்பற்றும் வகையில் பாஜகவினர் செயல்பட்டு வருவது உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகம் திறப்பு ரத்து
இந்தச் சூழ்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைப்பதாக இருந்தது.
முன்னதாக தச்சநல்லூர் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு வரை நடைபெற்ற வாகன பேரணியை எல்.முருகன் தொடக்கிவைத்தார். பேரணி முடிந்தவுடன் நேராக தேர்தல் அலுவலகத்தை எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் திடீரென தேர்தல் அலுவலகத்தை திறக்காமல் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் அருகில் அமைக்கப்பட்ட மற்றொரு நிகழ்ச்சி மேடைக்குச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
அலுவலகம் திறப்பதை ரத்து செய்ததன் காரணம் என்ன?
ரிப்பன் வெட்டுவதற்கு கத்தரிக்கோலுடனும், எல்.முருகனை வரவேற்பதற்கு பழங்களுடனும் தேர்தல் அலுவலக வாசலில் பாஜக நிர்வாகிகள் காத்திருந்தனர். செய்தியாளர்களும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவை படம்பிடிக்க முண்டியடித்துக் கொண்டு நின்றனர். திடீரென தேர்தல் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று கூறப்பட்ட தகவலை அறிந்து பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, நேற்று (பிப்.23) செவ்வாய்க்கிழமை என்பதால் சென்டிமென்ட் ரீதியாக நல்ல காரியம் தொடங்க கூடாது என்றும் நேரம் சரியில்லாத காரணத்தால் அலுவலகம் திறக்க வேண்டாம் என்றும் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து மற்றொரு தேதியில் அலுவலகத்தை திறந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே கடைசி நேரத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட இடத்தின் அருகில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எல்.முருகன் கலந்துகொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டி நயினார் நாகேந்திரன் தேர்தல் அலுவலக பந்தலுக்குள் ஹோமம் வளர்த்து பூஜை நடத்தியிருந்தார். இவ்வளவு ஏற்பாடு செய்தும் கூட கடைசி நேரத்தில் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது பாஜக கட்சியினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ”வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்” - எல்.முருகன்