திருநெல்வேலி: இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களே வழிபட்டு வருகின்றனர். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி, தை, ஆடி ஆகிய மூன்று தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மூன்று அமாவாசை தினங்களையும் புனித நாட்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு மட்டுமல்லாமல் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல் தை அமாவாசை முக்கிய புனித நாளாக பார்க்கப்படுகிறது எனவே ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் பொதுமக்கள் நீர்நிலைகளில் திதி கொடுத்து முன்னோரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக புண்ணிய தீர்த்தங்களாக கருதப்படும் நீர்நிலைப் பகுதியில் அதிக அளவு மக்கள் கூடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தை அமாவாசை தினம் இன்று வந்துள்ளது. தை அமாவாசையின் சிறப்புகள் என்ன? பிற அமாவாசைக்கும் தை அமாவாசைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசுப்பிரமணியன் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.
தனித்தனியாக திதி கொடுக்கக்கூடாது: தை அமாவாசையின் சிறப்புகள் குறித்து சிவசுப்பிரமணியன் நம்மிடம் கூறுகையில், "புரட்டாசி, தை, ஆடி ஆகிய 3 அமாவாசை சிறப்பு வாய்ந்தவை. முதலில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் முதல் மூன்று வருடங்கள் வீட்டில் மட்டும் தான் திதி கொடுக்க வேண்டும். அண்ணன் தம்பிகள் இரண்டு மூன்று பேர் இருந்தால் சேர்ந்து திதி கொடுக்க வேண்டும். தனித்தனியாக திதி கொடுக்கக் கூடாது.
நான்காவது வருடத்தில் இருந்து தான் பாபநாசத்திலோ அல்லது பிற ஆறுகள், குளத்திலோ திதி கொடுக்க வேண்டும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை சரியாக செய்ய வேண்டும். காசியில் வைத்து திதி கொடுத்தால் மிகவும் சிறப்பு. ஆனால் எல்லாரும் காசிக்கு செல்ல முடியாது. காசிக்கு நிகராக இருக்கக்கூடிய மற்றொரு புண்ணிய நதியாக இருக்கும் வற்றாத ஜீவ நதியான சித்தர்கள் வழிபாடு செய்த நமது தாமிரபரணி நதி திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
பாவம் போக்கும் பாபநாசம்: இந்த தாமிரபரணி நதி எல்லா பக்கமும் பயந்தாலும் கூட சில முக்கியமான படித்துறைகள் சிறப்பு வாய்ந்த்தாக கருதப்படுகிறது அதன்படி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் அமைந்துள்ள தாமிரபரணி படித்துறையில் திதி கொடுக்கலாம். இது ராமர் ஜடாயுக்காக திதி கொடுத்த ஸ்தலம் என்பது ஐதீகம். எனவே இங்கு திதி கொடுத்தால் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் ஆசியை பெறலாம் என்பது நம்பிக்கை.அடுத்ததாக கங்கைக்கு சமமாக இருக்ககூடிய முறப்பநாடு பகுதி. அங்கும் திதி கொடுக்கலாம். அதற்கு அடுத்தபடியாக பாவத்தை போக்கக்கூடிய பாபநாசத்தில் திதி கொடுக்கலாம்.
இந்த இடங்களில் எல்லாம், ஒருவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். வீட்டில் திதி கொடுப்பவர்கள் அன்றைய தினம் பாகற்காய், பீர்க்கங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் பயன்படுத்த வேண்டும். அனைத்து பழங்களும் வைக்கலாம் வழிபடலாம். செவ்வாழை வைத்து வழிபாடு செய்வது முன்னோர்கள் வழிபாடுக்கு சிறந்தது.
100 சதவீதம் வெற்றி: இறந்தவர்களின் அளவுக்கு செருப்பு வைப்பது, பச்சரிசி, நமது வசதிக்கு ஏற்ப வஸ்திரம் உள்ளிட்டவற்றை வீட்டிற்கு வரும் தீட்சகருக்கு கொடுப்பது சிறப்பு. கண்டிப்பாக அன்றைய தினம் அன்னதானம் செய்தால் சிறப்பு. தை அமாவாசையில் புதிதாக ஒரு காரியம் தொடங்கினால் 100% வெற்றி கிடைக்கும்.பூமி, நகை, பணம் சார்ந்து இருக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் அன்றைய தினம் தொடங்கலாம் அவை வெற்றியைத் தரும்.
பத்திர தீபம், தங்க தீபம்: அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் தை அமாவாசை அன்று மற்றொரு சிறப்பு திருவிழா நடைபெறும். இங்குள்ள நெல்லையப்பர் காந்திமதி கோயிலில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தை அமாவாசையில் ஒரு நாள் மட்டும் தான் பத்திர தீபம் ஏற்றப்படும். அமாவாசைக்கு முந்தைய தினம் தங்க தீபம் ஏற்றுவார்கள். நமது கடன் கஷ்டங்கள் நீங்க தங்க தீபம் ஏற்றப்படுகிறது.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் வீட்டில் தங்க விளக்கு ஏற்ற முடியாது; ஏற்றவும் கூடாது.ஐம்பொன் விளக்கு, அகல் விளக்கு, பித்தளை விளக்கு போன்ற விளக்குகளை ஏற்றுவார்கள். தங்க விளக்கு கோயிலில் மட்டும் தான் ஏற்றுவார்கள். அதுவும் குறிப்பிட்டு கோயில்களில் மட்டும்தான் ஏற்றுவார்கள். அதன்படி நெல்லையப்பர் கோயிலில் இவ்விளக்கு ஏற்றப்படுகிறது.
எனவே தை அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடும் நெல்லையப்பர் காந்திமதி அருளோடு பத்திர தீபத் திருவிழாவையும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதைப் போல் சூரியனின் முழு அருளும் ஆசியும் இருக்கக்கூடிய மாதம் தை மாதம். அதனால் தான் தை அமாவாசை சிறப்பு. மாதந்தோறும் அமாவாசையில் திதி கொடுக்க தவறிவர்கள் தை அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் ஒரு வருடத்திற்கு கொடுத்ததற்கான பலன் கிடைக்கும். வெளியூரில் இருப்பவர்கள் மாதம் மாதம் திதியை கடைபிடிக்க முடியவில்லை என்றால் தை அமாவாசையில் கடைபிடித்தால் ஒரு வருடம் திதி கொடுத்ததற்கான புண்ணியங்களும் பலன்களும் கிடைக்கும்." என்று சிவசுப்பிரமணியன் கூறினார்.