தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி புளியரை வழியாக கேரளாவிலிருந்து, தென்காசி மாவட்டத்தில் மதுபானங்கள் வரவழைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காடுகளில் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், செங்கோட்டை அருகே உள்ள பனிமூட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கு மதுபானம், குவாட்டர் விலை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது உறுதியானது.
இதனையடுத்து அங்கு சாராயம் காய்ச்சி விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 180 லிட்டர் ஊறலையும், ஒரு லிட்டர் கள்ளச் சாராயத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக முருகன், முத்துப்பாண்டி, மாரியப்பன் ஆகிய மூன்று நபர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.