திருநெல்வேலி: மறைந்த இலக்கியவாதி நெல்லை கண்ணன் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நெல்லை டவுனிலுள்ள அவரது இல்லத்திற்கு நேரில்சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கிருபானந்த வாரியாருக்குப்பிறகு தமிழ்க்கடல் என்று தமிழ் சமூகத்தால் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டவர், நெல்லை கண்ணன். தமிழ்க்கடலின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலிவுற்று அவர் மறைந்தாலும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. இலக்கிய மேடையில் அவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவரையும் சிந்திக்கத்தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையோடு இருந்தது.
ஆன்மிக நம்பிக்கையுடையவராக இருந்தாலும் அவரது சொற்பொழிவு முற்போக்கு சிந்தனையுடன் இருக்கும். நெல்லை கண்ணன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு; எனது பாதுகாப்பை இழந்ததாக கருதுகிறேன். அரசியல் தளத்தில் நெல்லை கண்ணன் சந்திக்காத ஆளுமைகளே கிடையாது. நெல்லை கண்ணனின் இழப்பு தமிழ் சமுதாய இலக்கியத் தளத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு” எனத் தெரிவித்தார்.
காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழக்கம் வைத்திருந்த நெல்லை கண்ணன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிரப்பேச்சாளராக இருந்தார். குறிப்பாக காமராஜர் மீது அதிகப்பற்று கொண்டவர். பெரும்பாலான மேடைகளில் காமராஜரைப் பற்றி பேசுவார். நெல்லை மொழிக்கேற்ப தனது பேச்சில் ’அவன் இவன்’ என சாதாரணமாக தான் பேசுவார். அதனால் இவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.
அவரது மறைவு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் உள்பட அனைத்துத் தரப்பிலும் சோகம் ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு கட்சித்தலைவர்கள் நிர்வாகிகள் நேற்றிலிருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் எம்எல்ஏ அப்துல் வகாப், நக்கீரன் இதழாசிரியர் கோபால், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து குடும்ப வழக்கப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக 9 மணி நேரம் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன்.. எழுத்தாளர் நாறும்புநாதன் சிறப்பு பேட்டி