திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலிருந்து பெண் ஒருவர் நண்பராக இருந்துள்ளார்.
இந்த நட்பு கடந்த இரண்டு மாதமாக நீடித்து வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசனின் செல்ஃபோன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்த உரையாடலின் போது, "நாம் இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருக்கின்றோம். தற்போது உங்களை நேரில் பார்க்க வேண்டும். எனவே, சுசீந்திரத்தை அடுத்துள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் வைத்து என்னை தனிமையில் சந்தியுங்கள்" என்று அப்பெண் கூறியுள்ளார்.
அரசனுக்கும் ஃபேஸ்புக் தோழியைக் காண ஆசை ஏற்படவே, அவரைக் காண நேற்று மேலகிருஷ்ணன்புதூர் சென்றுள்ளார். அப்போது, செல்ஃபோனில் அரசனை தொடர்புகொண்ட அந்தப் பெண் "நீங்கள் இருக்கும் இடத்திற்கு இருசக்கர வாகனத்தில், என் தம்பி வருவான் அவனுடன் வாருங்கள்" என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய அரசன் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருடன் ஏறிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் அரசனை மேலகிருஷ்ணன்புதூர் அடுத்துள்ள ராமன்புதூர் பகுதியிலுள்ள ஒரு முந்திரி தோப்பிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் முந்திரி தோப்பிற்குள் மறைந்திருந்த இரண்டு பேர், பைக்கில் அழைத்து வந்த இளைஞர் ஆகிய மூவரும் "உன்னைக் கொன்றுவிடுவேன்" என அரசனை மிரட்டி அவரிடமிருந்த, ரூ. ஒன்பது ஆயிரத்து 500 பணத்தையும், செல்ஃபோனையும் பறித்துவிட்டு அவரை அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பணப்பறிப்பில் ஈடுபட்டு அந்த அடையாளம் தெரியாத கும்பலைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று அப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க : ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!