நெல்லை தெற்குப்புறவழிச்சாலையில் அமைந்துள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகானந்தம் என்பவர் குடிபோதையில் சென்று இரண்டு நெய்பாட்டில்களை திருடியுள்ளார். அதை பார்த்த ஊழியர்கள் அவரைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் ஜூலை29ஆம் தேதியன்று அரிவாளுடன் சென்று ஊழியர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கடையின் முன்புற கண்ணாடிகளையும் உடைத்து தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதை அறிந்த அவர் தனது நண்பருடன் காரில் தப்பித்துச்சென்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையாளர், முருகானந்தத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையிலடைக்க உத்தரவிட்டார்.