சென்னை: உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 31) சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதற்காக கல்லூரி மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் மேடைக்கு வந்ததும் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட தயாராகினர், அப்போது ஆட்சியர் விஷ்ணு நீங்களும் வந்து பாடுங்க என திருநங்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து மூன்று திருநங்கைகள் கையில் மைக் பிடித்தபடி மாணவிகளுடன் இணைந்து மிக நேர்த்தியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடி அசத்தினர். பாடி முடித்ததும் ஆட்சியர் விஷ்ணு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதை சக திருநங்கைகள் தங்களுக்கு கிடைத்த கவுரமாக கருதினர்.
இந்நிகழ்வில், தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என்று தனியாக குறைதீர் கூட்டம் மூன்று மாதம் ஒருமுறை நடத்தப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் தொடர்பான பதிவை நீக்கியது ஏன் - அலியா பட் விளக்கம்!